உருளைக்கிழங்கு வறுவல்போல வெண்டைக்காய் வறுவல்!

உருளைக்கிழங்கு வறுவல்போல வெண்டைக்காய் வறுவல்!

சுவையும் சத்தும் மிக்க வெண்டைக்காய் குழந்தைகளுக்கு அவசியம் தர வேண்டிய ஒன்று. இதில் இருக்கும் கொழகொழப்பான திரவம் மூளையின் செயல் திறனை கூட்டும் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். அதனால்தான் வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளைவளரும் என்று நம் வீட்டுப் பெரியவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்றைய குழந்தைகளுக்கு காய்கறி என்றாலே பிடிப்பதில்லை. மற்ற காய்கறிகளைப் போல வெண்டைக்காயையும் ஒதுக்கிவிடுகிறார்கள். நிறைய பேருக்கு வெண்டைக்காய் வறுவல் கொழகொழப்பு இல்லாமல் செய்வதும் கடினமாக இருக்கிறது. அதற்கு ஒரு சுலபமான ரெசிபி இருக்கிறது. நேரம் மிச்சம், சத்தும் குறையாமல் வெண்டைக்காய் வறுவல் செய்முறைப் பார்க்கப்போகிறோம்


தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் -10
கருவேப்பிலை – ஒரு கொத்து
சாம்பார் தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
கடுகு, உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
உப்பு – ருசிக்கேற்ப

எண்ணெய் – 2 தேக்கரண்டி

எப்படி செய்வது?
வெண்டைக்காயை அலசி, தண்ணீரைத் துடைத்து விட்டு, வழக்கமான துண்டங்களாக வெட்டுங்கள். ஒரு நான் ஸ்டிக் தவாவில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு வெடிக்கவிடுங்கள். பிறகு, கருவேப்பிலையைப் போட்டு (அடுப்பை சிம்மில் வைத்திருங்கள்) வறுத்து, வெட்டி வைத்திருக்கும் வெண்டைக் காய்களைப் போட்டு கலந்து கொள்ளுங்கள். இதை அப்படி சிம்மில் 5 நிமிடங்கள் அவ்வவ்போது கிளறிக்கொண்டே இருங்கள். வெண்டைக்காயில் இருக்கும் வழவழப்பு மெதுவாக வெளியேறி இறுக ஆரம்பிக்கும். சிறிது நேரத்தில் வெண்டைக்காய் ஒட்டாமல் தனித்தனியாக வரும், அப்போது உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் தூள் சேர்த்து வாசனைப் போக வறுங்கள். உதிர் உதிராக வெண்டைக்காய் வறுவல் தயார். உருளைக் கிழங்கு வறுவல்போல இருக்கும் வெண்டைக்காய் வறுவலை வீட்டில் உள்ள பெரியர்கள் ஆர்வமாக சாப்பிடுவதைப் பார்த்து குழந்தைகளும் சாப்பிட ஆரம்பிப்பார்கள். செய்து பாருங்கள்!