முகம் பளிச்சிட கடலை மாவு மசாஜ்

முகம் பளிச்சிட கடலை மாவு மசாஜ்

எலுமிச்சை, மஞ்சள், கடலை பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பொருட்களை பயன்படுத்தி முகத்தை அழகு பெற செய்யலாம். கடலை மாவு, மஞ்சள் தூள்  இரண்டும் உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவை  எடுத்துக்கொண்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவுமுகம்.

சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் சருமம் மென்மையாகும்.
அழகை பேணிக்காப்பதில் கடலை மாவு முக்கிய பங்கு வகிக்கிறது. பொலிவிழந்த சருமத்தை இளைமையூட்ட இரண்டு ஸ்பூன் கடலை மாவில்  சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊற விடவும், நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என தோன்றும். அதே போல  குளிக்கும் போது கடலை மாவு பூசி குளித்தால் முகம் வழுவழுப்பாகும். சுருக்கம் ஏற்படாது. இளமையாக காட்சியளிக்கலாம். இரண்டு ஸ்பூன் கடலை  மாவுடன், 2 ஸ்பூன் ரோஸ்வாட்டர், 4 ஸ்பூன் பால் சேர்த்து கலக்கி, பின்னர் நன்றாக முகத்தில் பூச வேண்டும்.

10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் சருமம் மென்மையாக இருக்கும். கடும் வெயிலில் சென்றாலும் முகம் கருக்காது.
முகத்தில் பருக்கள் அதிகளவு காணப்பட்டால் அவற்றை நீக்க, ஒரு ஸ்பூன் கடலை பருப்புடன் ஒரு மிளகை போட்டு, சிறிதளவு பால் ஊற்றி ஊற  வைக்க வேண்டும். இதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரை சேர்த்து கலக்கி, முகத்தில் பூச வேண்டும். உலர்ந்ததும் நீரில் கழுவினால்  பருக்கள் படிப்படியாக மறைந்து போகும்.

சருமம் எண்ணெய் வழிந்து பிசு, பிசுப்பாக இருந்தால் அதற்கு கடலை மாவுடன் தயிர் சேர்த்து பேஷியல் போட்டால் முகத்தை பொலிவாக்கும்.  கிண்ணத்தில் கடலை மாவு எடுத்து அதில் தயிர் , எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். சில நிமிடங்கள் ஊற வைத்து  வெதுவெதுப்பான நீரில் கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.


சிலருக்கு முகம் எப்போதும் டல்லா வாடியபடி இருக்கும். அந்த முகம் பொலிவாக இருக்கவும் கடலை மாவு சிகிச்சை அளிக்கலாம். தோலுடன்  இருக்கும் அரை கிலோ கடலை பருப்பு, துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி, நன்றாக அரைத்து கொள்ள  வேண்டும்.

கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்திற்கு பூசி ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில்  முகத்தை கழுவினால் முகம் பொலிவாக காணப்படும். சோர்வு தெரியாது. வாரம் ஒரு முறை செய்தால் பள,பளவென முகம் பிரகாசமாக இருக்கும்.
வெயிலில் சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாகும். தேங்காய் பால் 1 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து இரண்டையும் கலந்து பசை போல  பிசைந்து, பின்னர் முகத்தில் பூச வேண்டும். உலர்ந்ததும் கழுவ வேண்டும். வாரம் இரு முறை இப்படி செய்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.

பெண்கள் சிலருக்கு முகத்தில் கருப்பு புள்ளிகள், திட்டுக்கள் தோன்றும். கண்ணுக்கு கீழ் அடர்த்தியான கரு வளையங்களும் விழும். இதை நீக்க  பாசிப்பருப்பு மாவு, கசகசா, பாதாம், பிஸ்தா, துளசி, ரோஜா மொட்டு இவற்றை நன்றாக காய வைத்து பவுடராக்கி, பாலுடன் சேர்த்து குழைத்து  முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் காணாமல் போய் விடும்.