உணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது?

 உணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது?

உயிர் வாழ்வதற்காகவும் உடல் நலம் பேணுவதற்காகவும் நாம் உண்ணும் உணவு பாதுகாப்பானதாக இல்லை என்றால்...? எவ்வளவு விபரீதம்!

  உணவு பொருளில் கலப்படம் செய்யப்படும் நோக்கத்தில் சேர்க்கப்பட்ட அல்லது தெரியாமல் சேர்ந்த பொருட்கள் கலப்பட பொருட்கள் எனப்படும்.
உணவு பாதுகாப்புத் தரச் சட்டத்தில் பாதுகாப்பற்ற உணவு என்பதற்கு பின்வரும் விளக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
* தரம் குறைந்த விலை குறைந்த பொருட்கள் முழுமையாகவோ, பகுதியாகவோ உணவு பொருளின் தரத்தை குறைக்கும்படி சேர்க்கப்பட்டிருந்தால்
*உணவில் உள்ள பொருட்கள் முழுமையாகவோ பகுதியாகவோ பிõருட்கள் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு, கட்டப்பட்டு சுகாதாரமற்ற முறையில் பாதுகாக்கப்பட்டிருந்தால் அதனால் தரம் குறைந்து, சுகாதாரக் கேடு ஏற்பட்டால்

கலப்படத்தால் ஏற்படும் கேடுகள்:
சில கலப்பட உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் நம் உடல்நலம் பாதிப்படையும்.
பால் கெட்டுப்போகாமல் இருக்க சிலரால் யூரியா, சோடியம் கார்போனேட், சோடியம் ஹைடிராக்ஸைட், பார்மால்டிஹைட், ஹைடிரோஜன் பெராக்ஸைட் ஆகியவை சேர்க்கப்படுவதால் குடலில் அரிப்பு ஏற்பட்டு பாதிப்பு உண்டாகும். உணவு வண்ணங்கள் , நறுமணங்கள், பதனப் பொருட்கள், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் போன்றவை அதிக அளவில் சேர்க்கப்பட்டாலும் அல்லது அவை அனுமதிக்கப்படாதவையாக இருந்தாலும் உடல் நலம் பாதிப்படையும்.
உணவில் அனுமதிக்கப்படாத வண்ணங்களான மெடானில் எல்லோ, ரோடமின் - பி.ஆரமின், ஆரஞ்சு 2, மாலசைட் கிரீன் ஆகியவை கல்லீரல் , சிறுநீரகம், எலும்பு, நுரையீரல் ஆகியவற்றை தாக்கி குறைப்பிரசவம், மலட்டுத்தன்மை போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

கலப்படத்தினால் ஏற்படும் பாதிப்பு:
 உணவுக் கலப்படத்தினால் ஏற்படும் தீவிர பாதிப்புகள் நுகர்வோரை ஏமாற்றுவது மட்டுமின்றி, உணவு கலப்படம் பல்வேறுகேடுகள் மற்றும் வியாதிகள் வரக்காரணமாகிறது. கலப்பட உணவில் கற்களும், மணலும், இருக்குமாயின் அது பற்களையும், குடலின் உட்பகுதியில் இருக்கும் மெல்லிய சதையையும் பாதிக்கும், அழுக்கு இருந்தால் பாக்டீரியா மூலம் வியாதியை உண்டாக்கும் நுண்ணுயிரியை சுமந்து வரும் டால்க் மற்றும் சுண்ணாம்பு பவுடர் நம்மால் ஜீரணிக்கப்படாமல் செரிமான சக்தியை பாதிக்கும், தூய்மையற்ற நீர் பல வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகள் வரக் காரணமாகும்.

சிலவகைக் கலப்படங்கள்:
* ஆர்ஜிமோன் கலப்படம்: உணவு எண்ணெயில் ஆர்ஜிமோன் எண்ணெய் கலப்படம்.
*ஆர்ஜிமோன் எண்ணெயின் நச்சுத்தன்மை பலரை பாதிக்கும் டிராப்ஸி என்னும் நோய் வரக்காரணமாகிறது. உணவு எண்ணெயில் ஆர்ஜிமோன் மெக்ஸிகானா என்ற கடுகுச் செடியோடு வளரும் களையின் எண்ணெய் சேர்ந்து விடுவதால் டிராப்ஸி உண்டாகிறது.
*டிராப்ஸி என்பது தொற்றுநோயல்ல, ஆனால் மிகவும் கடுமையான வியாதி, இதில் தொட்டால் அமுங்கி உள் செல்லும் அளவுக்கு வீக்கம் கால்களில் தோன்றும். இது மட்டுமல்லாது சருமம் சம்பந்தமான எரித்தீமா உடலின் பல பாகங்களில் தோன்றும், இதனால் இருதயமும் பாதிக்பகபட்டு இறக்க நேரிடலாம் அல்லது க்ளூகோமா உண்டாகி பார்வையற்று போகலாம்.

கேசரிப் பருப்பு கலப்படம்:
கேசரிப் பருப்பை தொடர்ந்து அதிகமாக உட்கொண்டால் அது தண்டுவடத்தை பாதித்து லத்தைரிசம் என்ற நோயை உண்டாக்கும். அது கை, கால் வளைந்து போகும் நிலையை ஏற்படுத்தும் இதனால், பாதிக்கப்பட்ட நபரின் நடையில் மாற்றம் மற்றும் மூட்டு முழங்கால்களில் அளவுக்கு மீறிய நடுக்கம் போன்றவை உண்டாகும், குறைவாக பாதிக்கப்பட்டவர்கள் வளைந்த கால்களுடன் நடப்பார்கள், அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் கத்திரியை போன்று வெட்டி வெட்டி நடப்பார்கள்.
B - oxalyal amino alanine (BOAA) என்ற அமினோ அமிலம் கேசரிப் பருப்பில் உள்ளது. இதுவே நியூரோ லப்தைரிசம் வரக்காரணம். சமீபத்திய ஆராய்ச்சியில் (BOAA) என்பது எக்ஸைட்டோ டாக்ஸின் (Excito toxin) இதுவே நரம்பில் வியாதி வரக் காரணமாகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் கேசரிப் பருப்புச் செடிகள் வளர்க்கப்படுவது குறைந்த வருகிறது. ஏனென்றால் இதனை விற்பதற்கு உணவுப் பாதுகாப்பு சட்டம் தடை விதித்துள்ளது.

காய்கறிகள் மற்றும் பழங்களில் அடங்கியள்ள ஆபத்து:
காய்கறிகள் மற்றும் பழங்கள் நமக்கு தேவையான சத்துக்களை கொண்டுள்ளன. ஆனால், அவை பல வகையான நச்சுப்பொருட்கள் மற்றும் ரசாயனங்களால் பாதிக்கப்படுவதால், காய்கனிகளிலும் ஆபத்து மறைந்துள்ளது. செயற்கையான முறையில் காய்கறிகள் மற்றும் பழங்களை பழுக்க வைப்பதற்கு கால்சியம் கார்பைட் , எதிபான் மற்றும் ஆக்ஸிடோஸின் பயன்படுத்தப்படுகிறது. உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைப்பதற்கு கால்சியம் கார்பைட் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
கால்சியம் கார்பைட், கேன்ஸர் உருவாக காரணமாகிறது. எதிபான், ஒரு பூச்சிக்கொல்லி மருந்து ஆக்ஸிடோஸின் ஒரு ஹார்மோன், பழத்தை, செயற்கையாக பழுக்க வைக்க இவை மூன்றும் உபயோகப்படுத்தப்படுகின்றன.

பழங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள்:
பூச்சிக்கொல்லி மருந்துகள், உலோகங்கள், இயற்கையான நச்சு பொருட்கள் மற்றும் பலவகையான நச்சுகள் (அஃப்லோடாக்ஸின் படுலின், ஆக்ரோடரக்ஸின்) போன்றவை காய்களிகள் மற்றும் பழங்களில் கலக்கின்றன. அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி மருந்துகளின் உபயோகமும், பூச்சிகளால் பாதிக்கப்பட்ட விதைகள், தண்ணீர், மண், உரங்களில் உள்ள உலோகங்களுமே அதற்கு காரணம்.

பழங்களை பாதுகாப்பாக உபயோகிக்க சில குறிப்புகள்:
புள்ளிகள் மற்றும் சேதங்கள் இல்லாத காய்கறிகள் மற்றும் பழங்களை தேர்ந்தெடுக்கவும்.
*சாப்பிடுவதற்கும் சமைப்பதற்கும் முன்னர் காய்கறிகள் மற்றும் பழங்களை சுத்தமான தண்ணீரில் நன்றாக கழுவவும்.
* காளான்களால் பாதிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை உபயோகிக்கூடாது.
* காய்கறிகள் மற்றும் பழங்களை டிடர்ஜென்ட்களால் கழுவுதல் கூடாது. அது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
*திறந்தவெளியில் உள்ள நறுக்கப்பட்ட பழங்களை வாங்குதல் கூடாது.

*உபயோகிக்கும் முன்னர் மட்டுமே காய்கறிகள் மற்றும் பழங்களை நறுக்குதல் வேண்டும். முட்டைக்கோஸ், லெட்டுஸ் போன்றவற்றின் வெளித்தோலை நீக்குதல் வேண்டும். இது இவற்றில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளை நீக்குகிறது.